கடந்த கால வலிகளை மறக்க விரும்புகிறோம்: நளினி உருக்கம்

கடந்த 28 வருடங்களாக சிறையில் அனுபவித்த துன்பங்களையும், வலிகளையும் மறக்க விரும்புவதாக, ராஜீவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான நளினி தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுபேர் விடுதலைக்காக தீர்மானம் கொண்டுவருதல் தொடர்பான அமைச்சரவை கூட்டம் நேற்று இடம்பெற்றதை தொடர்ந்து, நளினி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த ஆண்டுகளில் அனுபவித்த வலிகளை மறந்து வாழும் வாழ்க்கை விரைவில் வரும் என எதிர்பார்க்கின்றேன். நாங்கள் விரைவில் விடுதலையாவோம் என நம்புகிறேன்.

விடுதலையின் பின்னர் நானும் எனது கணவர் முருகனும் எங்கள் மகளுடன் இணைந்து வாழ்வோம். மகளுடன் வசிப்பதையே எனது கணவர் முருகனும் விரும்புகிறார்.

இதேவேளை மாநில அரசின் உரிமை பாதுகாக்கப்பட்டமை பெருமையாக உள்ளது. விடுதலையானதும் மகளுடன் இணைந்து சந்தோசமாக வாழுவோம்.

மகளின் திருமணத்தில் கலந்துகொள்ள மத்திய மாநில அரசு உதவும் என்று நம்புகிறேன்” என நளினி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி, தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ராஜீவ்காந்தி, தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டார்.

இக்கொலைக் குற்றச்சாட்டில் பேரறிவாளன் மற்றும் நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் கடந்த 28 வருடங்களாக மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ளனர்.

இவர்களை மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு பலரும் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து தமிழக அரசு முன்னெடுத்த பல முயற்சிகளும் தோல்வியடைந்தது.

எனினும் இவர்களை விடுதலை செய்வது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றில் நிலுவையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் இவர்களை விடுவிக்கும் உரிமை தமிழக அரசிற்கு உள்ளதாகவும், ஆளுநரின் அனுமதியுடன் தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக அரசிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அமைச்சரவை கூடி இவர்களை விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதாக முடிவெடுத்தனர்.

இதேவேளை, ராஜீவ்காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல்காந்தி, தனது தந்தையை கொலை செய்த குற்றத்தில் தண்டனை அனுபவித்து வருபவர்களை தான் மன்னிப்பதாகவும், அவர்களை விடுவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் நான் தந்தையை இழந்து அனுபவிக்கும் வலியை அவர்கள் அனுபவிப்பதை நான் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.