கடந்த ஆட்சியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக கோட்டாபயவிடம் விசாரணை: ஹாசு மாரசிங்க

கோட்டாபய ராஜபக்ஷவிடம் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) கடன் இணக்கம் தொடர்பிலான திருத்தச் சட்ட விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளி, யாரெனத் தெரியவேண்டுமானால் தன்னிடம் கேட்க முடியும் என லசந்தவின் மகளிடம் கூறியுள்ளார்.

அவருக்கு கொலையாளி தெரியும் என்றால், அவர் சி.ஐ.டியில் வாக்குமூலம் வழங்கியிருக்கலாம். தற்போது மீண்டும் பழைய நிலைமை நாட்டில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பிலான அடுத்தக்கட்ட விசாரணைகளை தானும், ஜனாதிபதியும், சி.ஐ.டியும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார்.

இந்த கருத்தை நான் மிகவும் உறுதியாகத் தான் கூறுகிறேன். இது நீதிமன்ற சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்துகிறது. இன்று அரச குடும்பமே இந்த விசாரணைகளுக்கான ஆணையை வழங்குகிறது.

ஆகவே, சி.ஐ.டிக்கு உத்தரவிடுவது யார் என்ற கேள்வி எழுகிறது. கோட்டாவின் உத்தரவுக்கமைவாகவே செயற்படுகிறதா எனும் கேள்வி எழுக்கிறது. இதனால்தான், லசந்தவின் கொலை தொடர்பில் தன்னிடம் கேட்குமாறு கோட்டாபய தைரியமாகக் கூறுகிறார்.

உண்மையில், இது பாரதூரமான ஒரு கருத்தாகும். எனவே, கோட்டாவை சி.ஐ.டிக்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இவ்வாறான கருத்துக்களால் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளின் பின்னணியில் யார் இருக்கிறார் என்ற சந்தேகமும் எழுகிறது” என ஹாசு மாரசிங்க மேலும் குறிப்பிட்டார்.