கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.

கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தேசியத் தலைவருடையது. அந்த உருவாக்கத்தில்தான் நாம் எல்லோரும் பயணித்தோம். அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகவே உள்ளது.

இவ்வாறு கூட்டமைப்பின் ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் போன்ற உறுப்பினர்கள் உயிரைக் கொடுத்த வரலாறு உள்ளது. இவ்வாறு பல நெருக்குதல் சூழ்நிலைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஆனால், இந்த வரலாறுகளை மக்களுக்கு நாம் சொல்வதில்லை.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகள் அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தது என்று சொல்கிறார்கள். ஆனால், கடந்த அரசாங்கத்தில் அரசியல் சாசன திருத்தங்கள் சம்பந்தமாக நிறைய விடயங்கள் நடந்தன.

அது நடைமுறைக்கு வராதபோதும், அது சம்பந்தமான எழுத்து மூலமான நகல் ஐ.நா. வரைக்கும் சாட்சி சொல்லக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், புத்த பிக்குகளாக இருந்தாலும் யாருமே இனப் பிரச்சிகைக்குத் தீர்வைத் தரமாட்டர்கள் என்ற வரலாற்றை எழுத்துமூலமாக நாம் பெற்றுள்ளோம். இதனை நாம் சர்வதேசத்துக்கு சாட்சிபகிர முடியும்.

எனவே, நாம் முண்டுகொடுக்கவில்லை. எமது அரசியல் நடவடிக்கைகள் வெல்லப்பட வேண்டும் என்பதற்காக சில விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். இவ்வாறு ஆதரவு தெரிவிக்கும்போது கம்பரெலிய போன்ற பல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல, இன்றைக்கு உள்ளதுபோல் அப்போது இராணுவ சோதனைச் சாவடிகள் இருக்கவில்லை. முக்கியமாக ஜனநாயக வழியில் போராடிய தியாகி திலீபனுடைய அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடையுத்தரவு போடுகின்றன.

அதைப்போல, கடந்த ஆண்டுகளில் எழுச்சியாக மாவீரர் துயிலுமில்லங்களில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளை இம்முறை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையுள்ளது.

மேலும், கடந்த அரசாங்கத்தில் பல போராட்டங்கள் நடந்தன. இப்போது போராட்டங்கள் நடந்தால் எந்தப் பிரிவுகளில் என்ன பிரச்சினை வரும் என்று தெரியாது.

ஆகவே, கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இராஜதந்திர நகர்வை செய்ததே தவிர யாருக்கும் முண்டுகொடுக்கவில்லை.

இதேவேளை, நாம் மக்களைக் குறைசொல்ல முடியாது, ஏனென்றால் கூட்டமைப்புக்குள்ளே சண்டை, விடுதலைப் போராட்டத்தை சிலர் ஆதரிக்காத போக்கு போன்றவை கூட்டமைப்பு மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு இன்னொரு காரணம், கூட்டமைப்பின் நகர்வுகளை நேரடியாக நாம் மக்களுக்குச் சொல்லவில்லை.

என்றாலும், ஒரு சிலதைத் தவிர கூட்டமைப்புக்கு கிடைக்காத ஆசனங்கள் தேசியத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.