ஓரிருவரை கைது செய்தமையால் முழு புலனாய்வு பிரிவும் சரிந்துவிடாது – இராணுவ தளபதி

புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஓரிருவரை கைது செய்தமையால் முழு புலனாய்வு பிரிவும் சரிந்துவிட்டது என்று சொல்ல முடியாது என இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் யுத்தகாலத்தில் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்களின் மரணம் படைத்தரப்பை சரிவடைய செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை அடுத்து நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர் சரத் பொன்சேகா, பாதுகாப்பு கட்டமைப்புக்களை மறுசீரமைக்க எவ்வளவு காலம் எடுக்கும் என வினா தொடுத்தார்.

இதற்கு குறுக்கிட்ட அமைச்சர் ரவி கருணாநாயக்க, இது மிக முக்கியமான கேள்வி என்பதனால் ஊடகங்கள் இல்லாமல் விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதன் பின்னர் 10 நிமிடங்கள் விசாரணை தள்ளிவைக்கப்பட்டு, ஊடகங்கள் வெளியேற்றப்பட்டன.