ஓடுபாதையை விட்டு விலகிய விமானம் தீப்பிடித்து விபத்து! அலறியடித்த பயணிகள்!

ரஷியாவில் விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகியதால் விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷியாவின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து தென்பகுதியில் உள்ள சோச்சி நகருக்கு 164 பயணிகளுடன் சென்ற போயிங் 737-800 ரக தனியார் விமானம் இன்று அதிகாலை சோச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் தரையிறங்கியதும் உரிய நேரத்தில் ‘பிரேக்’ போடுவதற்கு விமானி தவறிவிட்டதால் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது.

இதனையடுத்து உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் பத்து நிமிடம் போராடி விமானத்தில் பற்றிய தீயை அணைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

இந்த மீட்பு நடவடிக்கையின்போது தீயணைப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த 18 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.