ஒரு தேசத்தில் ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை- ஸ்ரீதரன்

ஒரு தேசத்தில், ஒரு தேசியக் கொடியின் கீழ் தமிழர்கள் இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிங்கள தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்த செயற்பாட்டின் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல என்பதும் எமக்கான தேசியக் கொடி இதுவல்ல என்ற உணர்வும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இயற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் இந்த நாட்டில் புறக்கணிகப்பட்ட மக்கள் என்பதை காட்டும் விதத்தில் சிங்கள தரப்பினர் பல்வேறு செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

யுத்தத்திற்கு முன்னரும் யுத்தக் காலகட்டத்திலும் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்தும் கூட சிங்களத் தரப்புகள் தமது மனங்களில் இதனை கனமாக வைத்துக்கொண்டு பயணிக்கின்றனர்.

இந்த நாடு தமிழர்களுக்கு அல்ல என சிங்களத் தலைமைச் சக்திகளே கூறிக்கொண்டுள்ளன. அதன் ஒரு வெளிப்பாடே இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களின் உரிமையைப் பறிக்கும் விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி தேசிய கீத புறக்கணிப்பாகும்.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கின்றது என்பது தமிழர்கள் இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது.

ஒரு தேசம், ஒரு தேசிய கோடி என்ற ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்த சிங்கள தலைமைகள் தயாராக இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறி வருகின்றனர்.

இந்த நாட்டினைப் புறக்கணிக்க தமிழர்கள் எந்த செயற்பாடுகளையும் செய்யவில்லை. ஆரம்பம் முதற்கொண்டு சிங்களத் தலைவர்களே இந்த நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற வகையில் சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமளிக்கக் கூடிய விடயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.