ஒரு சமூகம் என்ற அடிப்படையில் உறவுகளின் துன்பங்கள் குறித்து பாராமுகமாய் இருக்க கூடாது – சாலிய பீரிஸ்

ஒரு சமூகம் என்ற அடிப்படையில் காணாமல் போனோரின் உறவினர்களின் துன்பம் குறித்து பாராமுகமாய் இருக்காமல், நம்முடைய சக்திக்குட்பட்ட வகையில் இக்குடும்பத்தினர் உண்மையை அறியும் உரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு செயலாற்ற வேண்டும் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில் அலுவலகத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு கடந்த 5ஆம் திகதியிலிருந்து காணாமல் போனோர் அலுவலகம் ‘வேதனை என்றும் காணாமற்போவதில்லை. உண்மையைக் கண்டறியும் எமது கடமையினை நாங்கள் நிறைவேற்றுவோம்’ என்ற பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

தமது உறவினர்கள் தொடர்பான உண்மைகளையும், அவர்களின் தற்போதைய நிலையினையும் அறிந்து கொள்வதற்கான நாடு முழுவதிலும் காத்திருப்பவர்களின் துயரத்தை புரிந்துகொள்ளல் மற்றும் பச்சாதாபத்தை ஏற்படுத்தல் என்பன இப்பிரசாரத்தின் நோக்கமாக உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளதாவது, “காணாமல் போனோர் விடயம் தொடர்பில் அரச அதிகாரிகளித்திலும், பொதுமக்களிடத்திலும் குறைந்தளவான புரிதலே உள்ளது.

காணாமல் போனோரின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லை. நாங்கள் பொதுமக்கள் மத்தியில் புரிதல், ஒற்றுமை மற்றும் ஆதரவு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.” என கூறினார்.

இத்தகைய நோக்கங்களின் அடிப்படையிலேயே மேற்படி பிரசாரமானது காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.