ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Thamilini-akka-2தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ என்கிற நூல் தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும், தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளை அண்மித்துள்ள போதிலும், தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது இன்னமும் புலிகளின் அடிப்படை எண்ணங்களை நோக்கியதாகவே சில தரப்பினரால் கூர்மைப்படுத்தப்பட்டுள்ளது. அப்படியான நிலையில், சற்று சலசலப்பான உரையாடல்களை தமிழினியின் எழுத்துக்கள் ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதுவும், அவரின் மறைவிற்குப் பின்னர் நூல் வெளியாகியிருப்பதுவும் கூட சில சந்தேகங்களுக்கு காரணமாகியிருக்கின்றது.

தமிழினியின் எழுத்துக்கள் முன்வைக்கும் அடிப்படை அரசியல் எது, அது தமிழ் மக்களின் பெரும்பான்மையினர் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா, அல்லது தமிழ்த் தேசியப் போராட்டங்களின் நியாயங்களை கேள்விக்குள்ளாக்கும் தரப்பினருக்கான இன்னொரு ஆவணமா?, என்பது பற்றியெல்லாம் கவனிக்க வேண்டியது அவசியம். அது, தேவையற்ற சில பதற்றங்களைத் தணிக்க உதவும்.

தமிழினி தன்னுடைய வாழ்நாளில் சுமார் 18 ஆண்டுகளை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கழித்திருக்கின்றார். அவர் புற்றுநோயினால் மரணமடையும் போது அவருக்கு வயது 43. இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்த போது தமிழினிக்கு வயது 36 அல்லது 37ஆக இருக்கலாம். அப்போது, அவர் தன்னுடைய வாழ்நாளின் அரைவாசியினை ஆயுதப் போராட்ட இயக்கமொன்றின் உறுப்பினராக கழிந்திருந்தார். அப்போது வரையில் அவரின் அரசியல் நிலைப்பாடு, எதிர்பார்ப்பு எல்லாமும் ஒரு இயக்கத்தின் அணுகுமுறை சார்பில் நெறிப்படுத்தப்பட்ட ஒன்றாகவே அதிகம் இருந்திருக்கின்றது. இறுதி மோதல்கள் வீச்சம் பெற்று விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்த காலத்திலிருந்து அந்த எண்ணப்பாடுகளில் மாற்றங்களை தமிழினி காண ஆரம்பித்திருக்கின்றார். அதிலிருந்தும், இராணுவ சரணடைவு மற்றும் புனர்வாழ்வின்(?) பின்னரான சூழ்நிலைகளிலிருந்தும் தமிழினி தன்னுடைய அனுபவங்களையும், எண்ணங்களையும் எழுதியிருக்கின்றார். அவர், தோற்கடிக்கப்பட்ட ஆயுதப் போராட்டமொன்றில் பங்களித்த ஒருவராக, அதன் தர்க்க நியாயங்கள் தாண்டி ஆயுதப் போராட்டமொன்று சமூகத்துக்குள் ஏற்படுத்தும் விளைவுகளின் சில விடயங்கள் பற்றியும் பேச முயன்றிருக்கின்றார்.

‘ஒரு கூர்வாளின் நிழலில்’ தமிழினியின் சுயசரிதம் மாதிரியான தோற்றப்பாட்டினைக் கொண்டிருந்தாலும், அது உண்மையிலேயே சுயசரிதமொன்றுக்கான அடிப்படைகளை பல இடங்களில் தவிர்க்கின்றது. அதாவது, தான் கடந்து வந்த வாழ்க்கையின் பக்கங்களை அந்தத் தருணங்களின் உண்மையான உணர்திறனோடு அணுகுவதைத் குறிப்பிட்டளவு தவிர்த்துள்ள தமிழினி, தன்னுடைய இறுதிக் காலங்களின் நிலைமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு முன்னைய நாட்களையும், அனுபவங்களையும் எடைபோட முயற்சித்திருக்கின்றார். இது, நிலைப்பாடுகளின், எண்ணங்களின் மாற்றங்கள் சார்ந்தது. தமிழினி உயிரோடு இருந்து பத்து வருடங்கள் கழித்து தன்னுடைய போராட்ட காலங்களை அவர் எழுதியிருந்தால், இன்று எழுதப்பட்டுள்ள வடிவத்திலிருந்து பல மாற்றங்களை அது கண்டிருக்கலாம். அதாவது, நாம் இருக்கின்ற சூழ்நிலைகளில் கோலொச்சும் மனநிலையின் எழுச்சி சார்ந்தே எண்ணங்களும் அதிகமாக வெளிப்படும். அதுவே எழுத்துக்களாகவும் வருகின்றன.

தமிழினி எழுதியுள்ள விடயங்களில் சுமார் 80 வீதமான பகுதி தமிழ் மக்களுக்கு ஏற்கனவே அறிமுகமாக ஒன்று. அது, தமிழ் மக்களின் வாழ்வியலில் நிகழ்ந்தவை. தமிழினி புதிதாக சொல்லியிருப்பது என்று கொள்ளக் கூடியவை என்னவென்றால், அவரின் ஆரம்ப வாழ்க்கை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சில தலைமைப்பீட உரையாடல்கள் மற்றும் தன்னுடைய சரணடைவுக்கு பின்னரான அனுபவங்கள் பற்றியது மாத்திரமே. உலகிலேயே மிகவும் இரசியக் காப்புள்ள இயக்கங்களில் ஒன்றான விடுதலைப் புலிகளின் இரகசியம் காக்கும் தன்மை, அந்த இயக்கத்தின் இறுதிக் காலத்தில் முற்றாக ஆட்டம் கண்டிருந்தது. அப்படியான நிலையில், அது தொடர்பில் (தலைமைப்பீட உரையாடல்கள்) மக்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமானவை. ஆக, அதுவும் அவ்வளவு தாக்கம் செலுத்தும் ஒன்றல்ல.

தமிழினி முன்வைத்திருக்கும் எண்ணங்கள் முற்றுமுழுதாக விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியது. அவர் முன்வைக்கும் அரசியல் அது சார்ந்து எழுந்து அடங்குகின்றது. அங்கிருந்து பெரிதாக வேறு பக்கங்களில் நகரவில்லை. ஏனெனில், அவரது வாழ்நாளில் அவர் வேறு அரசியல் பார்வைகளைக் கொண்டிருப்பதற்கான அவகாசம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அப்படியான நிலையில், புதிய அரசியலையோ, அதனோடு தன்னைப் பொருத்திக் கொண்டு யோசிப்பதையே அவர் எதிர்கொள்வதற்கான கால அவகாசம் தேவைப்படும். எனினும், காலன் அதனை அவருக்கு வழங்கியிருக்கவில்லை. அப்படியான நிலையில், விடுதலைப் புலிகளின் இயக்க காலத்துக்கள் நிகழ்ந்தவைகள் பற்றியே அவர் பேசுகின்றார். அவை பற்றியே அவரினால் பேசவும் முடியும். அதுதான், அதன் மீதான இன்றைய எண்ணப்பாடுகளை அவர் எழுதும் போது விமர்சனமாக பலரினால் நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே நிகழ்ந்தவைகளை மாற்ற முடியாது. ஆனால், அவற்றிலிருந்து ஆரோக்கியமான உரையாடல்களை நிகழ்த்த முடியும். எதிர்காலம் நோக்கி பயணிப்பதற்கான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அப்படியானதொரு அணுகுமுறையின் சார்பில் தமிழினியின் எழுத்துக்களும் நோக்கப்பட வேண்டும். பெரும் அர்ப்பணிப்புக்களை நிகழ்த்தி முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டமொன்றின் தோல்வி ஏன் நிகழ்ந்தது. மற்றும் ஆயுதப் போராட்டமொன்று ஏற்படுத்தும் பக்க விளைவுகளின் வீரியம் எப்படிப்பட்டவை என்றெல்லாம் தமிழ்த் தரப்பு உரையாட வேண்டியது காலம் இது. அவற்றைத் தவிர்த்துவிட்டு அடுத்த கட்ட அரசியல் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவே முடியாது. அப்படியான முனைப்புக்கள் உண்மையான பயணங்களாகவும் இருக்காது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அர்ப்பணிப்பும், போராட்டமொன்றுக்கான ஓர்மமும் தமிழ்த் தரப்பில் வேறெந்த தரப்பினாலும் செய்யப்படாதது. அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அதன் தோல்வியின் பக்கங்கள் ஏன் நிகழ்ந்தது என்று ஆராய்வதை நிராகரிப்பதோ, அல்லது புலிகள் மீது புனிதப்படுத்தல்களை மாத்திரம் செய்துவிட்டு ஒதுங்குவதோ போலிக் கற்பிதங்கள் மீது மீண்டும் மீண்டும் கனவுக் கோட்டை கட்டுவது மாதிரியானது. அது, இன்னும் பல முள்ளிவாய்க்கால்களை எமக்கு வழங்கும் வல்லமை பெற்ற நிலைப்பாடுகளாகும்.

தமிழினி இறுதி மோதல்களில் இராணுவத்திடம் சரணடைந்தது முதல், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் வரை அவரை துரோகியாக்கி அணுகிய தரப்புக்கள் தமிழ் சூழலில் இருந்தன. அந்தத் தரப்புக்களே தமிழினி புற்றுநோயினால் இறந்ததும் தமது தேவைகளுக்காக தியாகியாக்கின. இன்றைக்கு அவரின் எழுத்துக்கள் முன்வைக்கும் விடயங்களை எதிர்கொள்ள முடியாமல் எப்படியாவது மீண்டும் துரோகியாக்கி புறந்தள்ளிவிடத் துடிக்கின்றன. ஆனால், பொறிக்குள் சிக்கிக் கொண்டுவிட்ட இந்தக் குறுமனநிலைத் தரப்புக்கள் தம்முடைய அரசியலாலேயே அதற்குள் சிக்கிக் கொண்டுவிட்டன என்பதுதான் உண்மை.

தமிழினி முன்வைத்துள்ள எண்ணங்களில் அதிகமானவை ஏற்கனவே தமிழ் மக்களினால் அறியப்பட்டவை. அனுபவ ரீதியான உணரப்பட்டவை. அவற்றை உள்வாங்கி- அவற்றை அனுபவித்த பின்னரே விடுதலைப் புலிகள் தொடர்பிலான ஆதரவு- அபிமானத்தின் பக்கத்தில் இன்னமும் இருக்கின்றார்கள். அது, ஒரு கணவன்- மனைவிக்கிடையிலான காதல்- வெறுப்பு மனநிலை போன்றது. ஆக, அந்த மனநிலையில், தமிழினியின் ஏண்ணங்கள் தாக்கம் செலுத்தாது. ஆனால், போலி கற்பிதற்களோடு, நிகழ்ந்தவைகளை அல்லது உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தரப்புக்கு சிக்கலானது. அந்தத் தரப்பே தொடர்ச்சியாக சலசலப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

தமிழினியின் எண்ணங்களை தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு எதிரான பிரதான தரப்புக்களான தென்னிலங்கையும், இந்தியாவும் தம்முடைய சார்பில் ஆதாரங்களாக கையாளும் என்றொரு வாதமும் வைக்கப்படுகின்றது. அது, சில விடயங்களில் உண்மைதான். ஆனால், அவற்றுக்காக ஏற்கனவே நிகழ்ந்தவை மற்றும் நாம் விட்ட தவறுகள் பற்றிய உரையாடல்களை செய்யவே கூடாது என்கிற தோரணையிலான அணுகுமுறை அபத்தமானது.

தமிழினியின் எண்ணங்கள் தமிழ்த் தேசியப் போராட்டம் என்கிற பெரும் சமுத்திரத்தில் ஒருசிறு துளி மாத்திரமே. அது, பெரும் உரையாடலொன்றின் சிறு புள்ளி. அந்தப் புள்ளியினை ஆரோக்கியமான பக்கத்தில் கொண்டு செல்ல வேண்டும். மாறாக, அவற்றை முற்றாக நிராகரித்து, போலிக் கற்பிதங்களுக்குள் சுற்றுவது உண்மையான போராட்ட சமூகமொன்றுக்கு அவமானகரமானது. நெஞ்சுறுதியோடு உண்மைகளை எதிர்கொண்டு களமாடுதல் தான் சிறப்பான எதிர்காலத்தை வடிவமைக்கும்.

LEAVE A REPLY