ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் வவுனியா விஜயம்!

இலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அஹமட் கீட் வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவுக்கு இன்று (சனிக்கிழமை) சென்ற அவர், குருமன்காடு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் வவுனியா மாவட்ட மத நல்லிணக்க குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது தீவிரவாதத் தாக்குதலின் பின்னர் மத நல்லிணக்கம் குறித்தும், தற்போது மத நல்லிணக்க நிலைமைகள் தொடர்பாகவும் உரையாடப்பட்டது.

இதையடுத்து பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை அஹமட் கீட் பார்வையிட்டார்.

ஏப்ரல்-21 தீவிரவாதத் தாக்குதலையடுத்து நீர்கொழும்பில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களை பார்வையிட்ட ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் அவர்களது தற்போதைய நிலை, தீவிரவாதத் தாக்குதலின் பின்னரான நிலமைகள் மற்றும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார். குறித்த சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரும் அவரது குழுவினரும் கருத்து கூற மறுத்திருந்தனர்.