ஐ.நா. பிரேரணையிலிருந்து விலகிச்செல்ல வேண்டுமென்கிறார் மஹிந்தர்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் (வியாழக்கிழமை), வாய்மொழிமூல கேள்விக்கான பதில் நேரத்தில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையானது, இலங்கையில் கலப்பு நீதிமன்றத்தை அமைக்கவும் ஐ.நா. கிளை அலுவலகத்தை நிறுவவும் வழிவகுப்பதாய் அமையுமென மஹிந்த இதன்போது குறிப்பிட்டார்.

தாருஸ்மன் அறிக்கை மற்றும் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையின் உள்ளடக்கங்கள் பொய்யான விடயங்கள் என்றும் இவற்றிலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அவ்வாறு இல்லாவிட்டால் மனித உரிமைகளின் மறைவில் இலங்கை நீதிமன்றம் கொச்சைப்படுத்தப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், அவற்றை தடுக்கும் வகையில் அரசாங்கத்திடம் பிரேரணை முன்வைப்பதாகவும், அதற்கு அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த சர்வதேச தலையீட்டுடனான கலப்பு நீதிமன்றத்தை இலங்கையில் அமைக்க வேண்டுமென ஐ.நா. பிரேரணையில் பிரேரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த பிரேரணையை வலுவிழக்கச் செய்யுமாறு மஹிந்த வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.