ஐ.நா பரிந்துரைகள் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும்! – வெளிவிவகார அமைச்சு உறுதி

ஐ. நா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை உறுதியாக நடைமுறைப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற குற்றங்களை விசாரணை செய்தல், போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயம் பெற்றுக்கொடுத்தல், அமைதி மற்றும் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் நீதியின் ஆட்சியை நிலைநாட்டல் என்பன தொடர்பில் 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

30/1 தீர்மானத்தின் கீழ் முன்வைக்கப்பட்டிருந்த குறித்த சிபார்சுகள் தொடர்பில் இலங்கை மற்றும் அமெரிக்கா இணை அனுசரணையாளர்களாக செயற்பட்டிருந்தன. குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டு வருட மேலதிக தவணைக்காலத்தை இலங்கை பெற்றுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கையின் உத்தரவாதம் மற்றும் சிபார்சுகள் நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் என்பன குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.இதற்குப் பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை நிச்சயமாக நடைமுறைப்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் உறுதியளித்துள்ளது.

LEAVE A REPLY