ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவினருக்கிடையில் விசேட கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஐவர் அடங்கிய குழுவினர் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பங்கேற்க வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஜெனீவாவுக்கு பயணமாகவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜெனீவாவிற்கு பயணிக்கவுள்ள இந்தக் குழுவில், வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திரு.ஏ.நெரின் புள்ளே ஆகியோர் அடங்குகின்றனர்.

இலங்கையின் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரனையுடன் தீர்மானம் 30/1 ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டு இந்த ஆண்டுடன் நான்கு வருடங்கள் கடந்துள்ளன.

குறித்த தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணங்கிய 36 பொறுப்புக்கூறல் கடப்பாடுகளில் 6ஐ நிறைவேற்றியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கையில் மறுசீரமைப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை விரிவாக்கல் என்ற தலைப்பில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, மொன்டிநேக்ரோ மற்றும் வடக்கு மெசடோனியா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து இந்த பிரேரணையை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் குறித்த மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இந்த மாதம் 20ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, அதனைத்தொடர்ந்து அறிக்கை தொடர்பான விவாதங்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.