ஐ.நா. ஆணையாளரின் கூற்றை ஏற்க மாட்டோம்! – இலங்கை அரசாங்கம்

ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து இலங்கை விலகிச் செல்ல வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய (வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்து உரையாற்றியபோதே திலக் மாரப்பன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

”எமது நாட்டின் இறைமை, தன்னாதிக்கம் என்பவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் தொடர்ச்சியாக செயற்பட்டோம். எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ளவும், எமது இறைமைக்கு ஏற்ப பிரஜைகளின் மனித உரிமையை பாதுகாக்கவும் பொறுப்புடன் செயற்பட்டோம்.

கடந்த காலத்தில் இலங்கைக்கு அவப்பெயர் ஏற்பட்டது. அந்நிலையை மாற்றியமைத்தோம். மிலேனியம் கோப்பரேசன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பொருளாதாரத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்கின்றோம்.

எமது நாட்டு படைவீரர்கள், சர்வதேச படைகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர். கூட்டுப்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை விடயம் தொடர்பாக ஐ.நா.வில் விவாதம் இடம்பெறவுள்ளது. ஐ.நா. ஆணையாளர் கூறும் சகல விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இராணுவம் வசமிருந்த காணிகள் விடுவிக்கப்படவில்லையென ஐ.நா. ஆணையாளர் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

பொறுப்புக்கூறல் தொடர்பான செயற்பாடுகளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவகாசம் கோரினோம். அக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை நாம் காட்டியுள்ளோம். அவ்வாறே இம்முறையும் கால அவகாசத்தைக் கோரியுள்ளோம்” என்றார்.