ஐ.நா.அமைதிப்படை இலங்கைக்கு வர வேண்டும்: யாழில் உறவுகள் போராட்டம்

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை, இலங்கைக்கு வருகைதர வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.கல்வியங்காட்டிலுள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ‘ஐ.நா.அமைதிப்படை வர வேண்டும்’, ‘காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று’, ‘கோட்டாபயவை கைது செய்’, ‘எங்கள் உறவுகள் எங்கே’, ‘சர்வதேசமே உடனடியாக கோட்டாவை கைது செய்’, ‘குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து’, ‘கோட்டாபய ஒரு உயிர் கொல்லி’, ‘எமது பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் வழங்க உனக்கு அருகதையில்லை’ ஆகிய கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியுள்ளனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொதுஅமைப்பைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.