ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு பணியக அதிகாரிகள் சிறிலங்கா பிரதமருடன் ஆலோசனை

ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு நிறைவேற்றுப் பணியகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், மின்சேல் கொனின்ஸ் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

தேசிய தீவிரவாத எதிர்ப்பு மூலோபாயம் ஒன்றை வகுப்பதை மையப்படுத்தியே இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் தீவிரவாத எதிர்ப்பு நிறைவேற்றுப் பணியகத்தின் அதிகாரிகளான, மசூத் கரிமிபோர், லெய்னா ஈசார்குயி, அட்ரியா டி லான்ட்ரி, கீதா சபர்வால் மற்றும் சிறிலங்காவுக்கான ஐ.நா தூதுவர் ஹனா சிங்கர் ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று இந்தச் சந்திப்பின் போது தெரிவித்துள்ள சிறிலங்கா பிரதமர், இதற்கு நிதியை விடுவிக்குமாறு திறைசேரியிடம் கோரவுள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.