ஐ.தே.க.வின் தலைமைத்துவம் குறித்து இரு தினங்களுக்குள் முடிவு எட்டப்படும் – ரணில்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான தீர்வை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் முன்வைக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரியவுடன் கொழும்பு–அமரசேகர மாவத்தையில் அமைந்துள்ள சபாநாயகரின் இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த கலந்துரையாடலுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சபாநாயகர் கருஜயசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சி தலைமைத்துவம் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

எனினும் குறித்த சந்திப்பில் கட்சி உறுப்பினர்களிடத்தில் வேறுபாடான நிலைப்பாடுகள் காணப்பட்டதை அடுத்து அன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.