ஐ.தே.க.வின் இடைக்கால தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க ரணில் இணக்கம்?

கட்சியின் தலைமைப் பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வரும் ரணில், இடைக்கால தலைவராக கரு ஜயசூரியவை நியமிக்க ரணில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்திய ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்குவதற்கான சம்மதத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டதாகவும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தோல்வியோடு கட்சியின் பிரதித்தலைவர் பதவியை இராஜினாமா செய்த சஜித் பிரேமதாச, ரணிலை சந்திக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். மேலும் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கினால் மாத்திரமே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும் சஜித் பிரேமதாச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கரு ஜயசூரியவை இடைக்கால தலைவராக்கி, அவரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.