ஐ.தே.க.சர்வாதிகாரப் போக்குடன் பயணிக்க ஆரம்பித்துள்ளது- சரத் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக வழியிலிருந்து, சர்வாதிகாரப் போக்குடன் பயணிக்க ஆரம்பித்துள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், கட்சியின் இந்தப் பயணம் பொதுத் தேர்தலை பாதிக்கும் எனவும் கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “செயற்குழு உறுப்பினர்களை வெளியேற்றவும், தனங்களுக்கு தேவையான நபர்களை உள்ளீர்ப்பதும், கௌரவமான கட்சியொன்றின் செயற்பாடு அல்ல.

ஜனநாயக ரீதியான கட்சியென்றால், தனிநபர் ஒருவர் இந்த விடயங்கள் தொடர்பாக முடிவெடுக்கக்கூடாது. கட்சித் தலைவர் மட்டும் இந்த விடயத்தில் முடிவெடுக்க, கட்சி ஒன்றும் அவரது தனிப்பட்ட சொத்து கிடையாது.

இது மக்களின் கட்சி என்பதால், ஒருவர் செய்யும் தவறுக்கூட மக்களைத்தான் பாதிக்கும். தெரிவுக்குழுவின் உறுப்பினர்களை தெரிவு செய்வதற்குக்கூட ஒரு குழு உள்ளது. ஆனால், எம்மை எல்லாம் வெளியேற்றிய செயற்பாடுகள் இவ்வாறு இடம்பெறவில்லை.

நாம் அனைவரும் கட்சித் தலைமையில் மாற்றமொன்று வேண்டும் என்றுதான் இருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளால், பொதுத் தேர்தலின்போது கட்சிக்குத்தான் பாதிப்பு என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் தேர்தலில் களமிறங்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். எனினும், அவர்தான் கட்சித்தலைவராக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத ஒருவரை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்? ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தோல்வியடைவதற்கு பல காரணங்கள் உள்ளன.

உண்மையில், கடந்த நான்கரை வருடங்களில் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்காக எதனையும் நாம் செய்யவில்லை. குறைந்தது, ஐக்கிய தேசியக் கட்சியைக்கூட பலப்படுத்தவில்லை. இவ்வாறு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இந்த தவறுகள் தொடர்பாகவும் நாம் சிந்தித்து, செயற்பட வேண்டும். இவற்றை திருத்திக்கொண்டால், 20 இலட்சம் வாக்குகளை பொதுத் தேர்தலின்போது மேலதிகமாக எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் மக்கள் விரைவில் உணர்ந்துக்கொள்ளக்கூடிய நிலைமை ஏற்படும் என்பதால், பொதுத் தேர்தலின்போது நாம் மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்துவோம்” என குறிப்பிட்டுள்ளார்.