ஐ.தே.கவின் முழுப் பதவிகளிலும் மாற்றம் வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மட்டுமன்றி, ஏனைய பதவிகளிலும் புதியவர்களை நியமிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதனை அவர்கள் மேற்கொள்ளத் தவறினால், அந்தக் கட்சிக்கு எதிர்க்காலம் ஒன்று இருக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சரியாக இருந்தால், இந்த பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன், காலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்துக் கொள்ள வேண்டும்.

தலைவர் மட்டுமன்றி, செயலாளர், தேசிய அமைப்பாளர், பொருளாளர் என அனைவரும் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்து கொள்ள வேண்டும்.

இவர்களால் தான் இந்தக் கட்சிக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவர்கள் பதவி விலகாமல் இனியும் அந்தக் கட்சிக்கு எதிர்க்காலமொன்று இருக்காது என்பதுதான் உண்மையாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.