ஐ.தே.கவின் படுதோல்வியையடுத்து வெடித்துள்ள முரண்பாடுகள்! சஜித்துடன் இணைக்க தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றாக இணைவதற்கு இருதரப்பினரும் விரும்பினால் அதற்கான மத்தியஸ்தம் வகிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி தொடர்கிற நிலையில், அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்ததை அடுத்து அவர் இந்த தகவலை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த தேர்தலில் எதிர்கொண்ட படுதோல்வியை அடுத்து மீண்டும் தலைமைத்துவ நெருக்கடியை சந்தித்துள்ளது.

கட்சியின் தலைவர் பதவிக்கு பலர் முன்வந்துள்ள நிலையில், பதவியை விட்டுக்கொடுப்பதற்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை முன்வரவில்லை. அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான கரு ஜயசூரியவுக்கும் தலைமைத்துவத்தை வழங்க முடியாது என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இவ்விரு தலைவர்களிடமும் சந்திப்பை நடத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, நேற்றைய தினம் மாலை ராமாஞ்ய பீடத்தின் தலைமைத் தேரரை நேரில் சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். இதனையடுத்து ஊடகங்களுக்கும் அவர் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர் ,

இருதரப்பினரையும் இணைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு எனக்கு ஒரு தலையீடு செய்ய முடியுமாயின் அதற்கு நான் தயாராக இருக்கின்றேன். கடந்த வாரம் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தேன். அதேபோல கடந்த வாரமே கரு ஜயசூரியவையும் சந்தித்திருந்தேன். ஒரு கட்சி, ஒரு நபரது உந்துதலில் அல்லது ஆலோசனையில் இந்த தலையீட்டை நான் செய்யவில்லை.

மாறாக இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காகவே சுயேட்சையாக நான் இந்த முயற்சியை செய்தேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியடுத்து மிகவும் சோர்வடைந்துள்ளனர். அதேபோல 41 இலட்சம் ஆதரவாளர்கள் கட்சிக்குள் இருந்த பிரிவு காரணமாக வாக்குச் சாவடிக்கு செல்லவில்லை.

இதேவேளை, 40 இலட்சம் பேர் தேர்தலைப் பகிஸ்கரித்துவிட்டனர். இது இந்த நாட்டின் மிகப்பெரிய தேர்தல் புறக்கணிப்பு எண்ணிக்கையாக இருக்கிறது. ஆகவே வழங்கப்பட்டுள்ள பதிலை புரிந்துகொள்ள வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் இணையுமானால் அதற்கான மத்தியஸ்தம் வகிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.

அதேபோல சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தில் இதனைக் கட்டியெழுப்பவும், அனைத்து தலைவர்களுக்கும் கௌரவமான ஒரு தீர்மானத்தை எடுக்க முடியுமாயின் சிறந்த தீர்மானத்தை எடுக்க நாங்களும் முன்வருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.