ஐ.தே.கவின் அதிரடியான தந்திரோபாய காய்நகர்த்தல்! கோட்டவை தன் பிடிக்குள் வைக்கப்போகும் பொன்சேகா?

கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோத்தாபய ராஜபக்ச, அடுத்து சிறிலங்கா குடியுரிமையை மாத்திரம் கொண்டுள்ளார் என்பதை, உள்நாட்டு விவகார அமைச்சின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு, சிறிலங்கா குடியுரிமையை பெற்றால் தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதனால், கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை விவகாரத்தில் சரத் பொன்சேகா தலையீடு செய்யவோ, செல்வாக்குச் செலுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

தற்போது, உள்துறை அமைச்சுக்கு மேலதிகமாக உள்நாட்டு விவகார அமைச்சையும், அமைச்சர் வஜிர அபேவர்த்தன வைத்திருக்கிறார்.

உள்நாட்டு விவகார அமைச்சே, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை கையாளுகிறது. குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்காவிலும் குடியுரிமையை உறுதிப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.