ஐவரடங்கிய குழு ஜெனிவா செல்கிறது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கூட்டத்தொடரில் இலங்கை, அரசாங்கத்தின் சார்பில் 05 பேர் அடங்கிய குழுவினர் பங்கேற்க உள்ளதாக வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் பற்றிய மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பான பரிசீலனையானது, இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் 40வது அமர்வில் 2019 மார்ச் 20ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ள அதேவேளையில் இதே விடயத்தில் இலங்கையானது இணை-அனுசரணை வழங்கியுள்ள இலங்கை மீதான வரைவுத் தீர்மானமானது 2019 மார்ச் 21 ஆம் திகதி விவாதிக்கப்படுவதற்கும் அட்டவணையிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பின்னர் மேற்படி பரிசீலனையின் போது கொழும்பில் இருந்து பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவில் பின்வருவோர் உள்ளடங்குவர் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன (தூதுக்குழு தலைவர்), கலாநிதி சரத் அமுனுகம பா.உ, கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண ஆளுநர், திரு. ரவிநாத் ஆரியசிங்க செயலாளர் – வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சு, மற்றும் திரு.ஏ.நெரின் புள்ளே, பிரதி மன்றாடி நாயகம் ஆகியோர் ஜெனிவா செல்ல உள்ளனர்.

இவர்கள் இலங்கையின் ஐ.நா நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனிவாவிலுள்ள ஏ.எல்.ஏ. அசீஸ், பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியாக ஜெனிவாவிலுள்ள சமன்த ஜயசூரிய மற்றும் ஜெனிவாவிலுள்ள இலங்கை நிரந்தர தூதுவராலயத்தில் பணியாற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் இணைவர்.