ஐதேக வேட்பாளரை அறிவித்த பின்னரே தமது வேட்பாளரை அறிவிப்பாராம் மகிந்த

ஐக்கிய தேசியக் கட்சி அதிபர் வேட்பாளரை அறிவித்த பின்னரே, தமது தரப்பு வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள சுருக்கமான செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சமல் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், உங்களின் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது,

அதற்கு அவர், ”நாங்கள் இன்னமும் முடிவு செய்யவில்லை. நாங்கள் காத்திருக்கிறோம். ஒவ்வொருவதும் பரப்புரை செய்ய முடியும். நிச்சயமாக நாங்கள், வெற்றிபெறக் கூடிய ஒருவரையே வேட்பாளராக தெரிவு செய்வோம்.” என்று கூறியுள்ளார்.

வேட்பாளர் யார் என்று கட்சி எப்போது முடிவு செய்யும் என்றும், எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ”ஐக்கிய தேசியக் கட்சி தமது வேட்பாளரை அறிவித்த பின்னரே, நாம் அதனை அறிவிப்போம்” என்றும் பதிலளித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.