ஐதேக தனித்து ஆட்சியமைக்க வழி விடுவதே தார்மீகம்! – எஸ்.பி திசாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சி நடத்த இடம் கொடுத்து சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து தார்மீகத்துடன் முழுமையாக விலகிக் கொள்ள வேண்டும் என்ற எமது விருப்பத்தை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அறியத்தந்துள்ளதாக அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் நேற்று தெரிவித்தனர்.

மத்திய செயற்குழு இறுதி தீர்மானத்தை எடுக்கும் வரை நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் எதிர்க்கட்சியாக இருந்து சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோமென்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

தேசிய அரசாங்கம் எனும் பரீட்சை தோல்வியடைந்துள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை 122 வாக்குகளால் வென்ற பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதே ஜனநாயகம் என சுட்டிக்காட்டிய அவர்கள் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினாலும் எதிர்க்கட்சியாக செயற்பட்டு 2020 இல் தனி அரசாங்கம் அமைப்பதற்கு ஏற்ற வகையில் சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துவோமென்றும் கூறினார்.

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஜனாதிபதி லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் மத்திய செயற்குழுவைக் கூட்டி எமது வேண்டுகோளை பரிசீலனை செய்து எமது விருப்பத்துக்கு ஆதரவாக சரியான தீர்மானத்தைப் பெற்றுத் தருவாரென்ற நம்பிக்கைகயில் இருக்கிறோம் என்றும் அவர்கள் கூறினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, டிலான் பெரேரா, தயாசிறி ஜயசேக்கர, சந்திம வீரக்கொடி, திலங்க சுமத்திபால உள்ளிட்ட குழுவினரால், அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதாக இராஜினாமா செய்துள்ள 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சார்பிலும் நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

மத்திய செயற்குழு எமது வேண்டுகோளை நிறைவேற்றுமாயின் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் பிரதமருக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இயல்பாகவே அரசாங்கத்திலிருந்து விலக நேரிடும் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.

எஸ்.பி திசாநாயக்க எம்.பி தெரிவித்ததாவது- ஐக்கிய தேசியக் கட்சியுடன் சண்டைப்பிட்டிப்பதை விடுத்து அவர்களுக்கு தனி அரசாங்கம் நடத்த இடம் கொடுக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். ஊழல் மோசடிகளைத் தவிர்த்து நாட்டு மக்களுக்கு நல்லாட்சியைப் பெற்றுத்தரும் நோக்கிலேயே நாம் ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சி அமைத்தோம். ஆனால் ஐ.தே.க, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் பொருளாதாரத்தையே விரட்டிச் செல்கின்றனர். காசுக்காக அரசாங்கத்தின் உடைமைகளை விற்கின்றனர். எனவே நாம் தேசிய அரசாங்கத்திலிருந்த விலகி எதிர்க்கட்சியாக இருந்து சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பலப்படுத்தவுள்ளோம்.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினாலும் மக்களுக்கான அனைத்து தீர்மானங்களிலும் நாம் செல்வாக்கு செலுத்துவோம் என தெரிவித்தார்.

LEAVE A REPLY