ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயார் – அர்ஜுன

கட்சி தீர்மானிக்குமானால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தயாராக இருப்பதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினை மற்றும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக சர்ச்சைகள் நிலவிவரும் நிலையில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மஹரவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தார்.

அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், இது குறித்து ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.