ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக எதிர்வரும் 24ஆம் திகதி இறுதித் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக எதிர்வரும் 24ஆம் திகதி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க மற்றும் கருஜயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்வரும் வாரம் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள், கட்சியின் தலைமைத்துவம், பொதுத்தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சியின் தலைமைப்பதவியினை சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இதுகுறித்து தீர்மானம் மேற்கொள்வதற்கான கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நேற்றைய கூட்டம் தீர்மானம் இன்றி நிறைவடைந்திருந்தது.

எனினும், குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட 65 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 52 பேர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கட்சித் தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தினை ஏற்றுக் கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.