ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்ற இந்தியப் பொறியியலாளர் கைது!

ஏவுகணைத் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைகளுக்கு அனுப்பியதாக பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைகளுக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DARO) பொறியியலாளர் நிஷாந்த் அகர்வால் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக விசாரித்து வருவதாக இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருவதுடன், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையைத் தயாரிக்கும் நிறுவனம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.