எவருக்கும் சிரமம் ஏற்படக் கூடாது! கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோட்டாபய கண்டிப்பான உத்தரவு

குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு போதுமான அதிகாரிகளை இணைத்துக் கொண்டு, முடிந்தளவு பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று மாலை மேற்கொண்டிருந்தார். இதன்போது, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.

இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசிய ஜனாதிபதி, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் எந்தவொரு பயணியும் சிரமத்திற்குள்ளாகாத வகையில் செயற்பட வேண்டும்.

விமான நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எந்தவொரு பயணிக்கும் சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது.

குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு போதுமான அதிகாரிகளை இணைத்துக் கொண்டு, முடிந்தளவு பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதன்போது விமானத்திற்கு காத்திருந்த வெளிநாட்டு பயணிகளுடன் ஜனாதிபதி உரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை, சாதாரண பயணி ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழையும் சந்தர்ப்பத்தில் இருந்து விமானத்திற்கு செல்லும் வரையிலான காலப்பகுதியை ஜனாதிபதி கண்காணித்துள்ளார்.