எவராலும் மறுக்க முடியாது… மறக்கவும் மாட்டேன்! தமிழர்களின் செயல்பாடு தொடர்பில் மனம் திறந்த மைத்திரி

தமிழர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் செயல்பாடுகள் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்துரைத்துள்ள அவர்,

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நாட்டின் கட்டாய தேவையாக இருந்தது, அதுவரை நாட்டில் நிலவிய மிக மோசமான செயற்பாடுகள், அதிகார அடக்குமுறைகள் என்பவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக நான் தலைமையேற்க தீர்மானித்தேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர் நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக செயற்படுத்த என்னாலான சகல நடவடிக்கைகளையும் நான் முன்னெடுத்துள்ளேன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதுமட்டும் அல்லாது நிறைவேற்று அதிகாரத்தை அதிகமாகவே கையாண்ட தலைவரும் நானேயாவேன்.

இந்த நாட்டில் எந்தவொரு அரச தலைவரும் முன்னெடுக்காத தைரியமான வேலைத்திட்டங்களை நான் எனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்தேன். நான் செயற்பட்டதை போல வேறு எந்த தலைவரும் செயற்பட்டிருக்க மாட்டார்கள்.

இலங்கையின் எந்த ஜனாதிபதி தனது அரசாங்கத்தில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு தேர்தலில் போட்டியிட்டு தோற்ற ஒருவரை மீண்டும் பிரதமராக்கியுள்ளார் ? அப்போது பிரதமாராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கினேன்.

இவ்வாறான தீர்மானங்களை வேறு எந்தவொரு ஜனாதிபதியாவது முன்னெடுத்துள்ளனரா. ஆகவே நான் ஏனைய ஜனாதிபதிகள் போல் அல்லாது தைரியமாக செயற்பட்ட நபர்.

இந்த நாட்டில் எனது நல்லாட்சி அரசாங்கத்தில் போன்று சுதந்திரம் வேறு எந்த ஆட்சியாளர்களும் வழங்கியிருக்க முடியாது. நான் வழங்கிய சுதந்திரத்தை கொண்டே ஊடகங்கள் என்னை தாக்கினர். இன்றும் விமர்சித்தே வருகின்றனர்.

ஆனால் நான் அதனைக் கண்டு கவலைப்படவில்லை. ஊடக சுதந்திரமும் ஜனநாயகமும் என்னால் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நான் வழங்கிய சுதந்திரத்தை நானே விமர்சிக்க விரும்பவில்லை. என்னை விமர்சிக்கும் அனைவருக்கும் நான் கூறுவது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் இன்று என்னை விமர்சித்து கேலி செய்யும் சுதந்திரம் என்னால் வழங்கப்பட்டது என்பதை மறந்துவிட வேண்டாம்.

இதேவேளை, என்மீது நம்பிக்கை வைத்தே ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது வெற்றியில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகமாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

அதேபோல் எனது ஆட்சியில் வடக்கு கிழக்கில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணிகள் விடுவிப்பு அதில் மிக முக்கியமான விடயமாகும்.

இந்த ஆட்சியில் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள் என நான் நம்பவில்லை. ஆனால் நான் வழங்கிய சலுகைகள் இவர்களால் வழங்க முடியுமா என்பது குறித்து என்னால் தெளிவாக கூற முடியாது.

எவ்வாறு இருப்பினும் இந்த நாட்டில் தமிழ் மக்களும் சம உரிமைகள், அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.