எல்லோருக்கும் பிடித்த பெண் சமந்தாவின் சிறப்பு பேட்டி

சமந்தா“”நம்பிக்கையை சம்பாதிப்பதுதான் சினிமாவில் ரொம்ப கஷ்டம். பணமும், கடனும் சீக்கிரமே வந்து சேர்ந்து விடும். ஆனால் நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்க முடியாது. அந்த நம்பிக்கைக்கு உதாரணம்தான் இந்தப் படம். என்னை மட்டுமே நம்பிக் கதைக்குள் வந்தார் விக்ரம் சார். “உங்க “கோலி சோடா’ பார்த்தேன். அந்த பரபரக்கும் ஆக்ஷன் சூப்பர். எனக்கொரு கதை பண்ண முடியுமா?’ என்று கேட்டார். இந்தியாவின் முக்கியமான நடிகர். அவரின் நம்பிக்கைக்கு தோள் கொடுக்கும் விதமாக படத்தை உருவாக்கி முடித்திருக்கிறேன். செமத்தியான ஹீரோ சப்ஜெட்” என உற்சாகமாகப் பேசத் துவங்குகிறார் இயக்குநர் விஜய்மில்டன். கடந்த ஆண்டு “கோலி சோடா’ மூலம் கோடம்பாக்கத்தின் கவனம் ஈர்த்தவர். இந்த முறை “பத்து எண்றதுக்குள்ள படத்தின் மூலம் வருகிறார்.

“பத்து எண்றதுக்குள்ள’… மேஜிக் தலைப்பு… என்ன விசேஷம்…?

சூப்பர் மேன் கதை மாதிரி இருக்கும். ஆனால் அதே நேரத்தில் நம் வாழ்க்கையின் யதார்த்தை எந்த நேரத்திலும் மீறாத கதை. வாகனங்களில் போகும் ஒவ்வொரு விநாடியும் முக்கியம். சிக்னல்களில் எரியும் சிவப்பு விளக்குக்கும், பச்சை விளக்குக்கும் இடையில் கடந்து போகிற நொடிகள் அத்தனை பரவசமானது. அதே நேரத்தில் பரபரப்பானது. கொஞ்சம் இடறினாலும் வாழ்க்கையின் அத்தனை நிமிடங்களும் மாறி விடும். நெடுஞ்சாலைகளில் கடந்து போகிற வாகனங்கள் ஒவ்வொன்றின் வேகமும் ஒரு மாதிரி. 100, 140 கி.மீ வேகம் என்பதெல்லாம் மிகச் சாதாரணம். அந்த மாதிரியான பயணங்களில் ஒவ்வொரு விநாடியும் முக்கியத்துவம் வாய்ந்த நேரங்கள். அதே போல மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் விமானிக்கு… அந்த நேரம் எவ்வளவு முக்கியம்…? தொலைவில் குறுக்கே பறவை ஏதாவது வரும் போது அந்த வினாடியில் அவர்கள் சிந்தனை, செயல்பாடு எல்லாம் அவர்கள் இயக்கும் வாகனத்தைவிட வேகமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவனின் மனநிலைதான் இந்தப்படம். “பத்து எண்றதுக்குள்ள’ என்கிற இந்த வார்த்தை பல இடங்களில், பல சூழல்களில் பிரபலம். எனவே வேகம், நேரம் இவற்றைக் குறிக்கும் வகையில் அதையே தலைப்பாக வைத்துவிட்டேன்.

படத்துக்குப் படம் மாறுகிறவர் விக்ரம்… இந்தப் படத்திலும் அதை உணர முடிகிறது… நேரில் இருந்து பார்த்திருப்பீர்கள்… ஒரு படத்துக்காக எப்படி தயாராகிறார் விக்ரம்…?

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் உடம்பு முக்கியமான மூலதனம். நடிகர்களில் விக்ரம்தான் அதை சரியாகப் பயன்படுத்துகிறார். மனசு சொல்லுவதை உடம்பு கேட்கிற வரைக்கும்தான் வாழ்க்கை என்று சொல்லுவார்கள். அதை ஒவ்வொரு நாளும் மனசுக்கும், உடம்புக்கும் கடத்திக் கொண்டிருக்கிற நடிகர் விக்ரம். “”சார் இப்படி ஒரு கதை. ரொம்பவே இயல்பான ஒரு ஆளு. எளிமையான வாழ்க்கை. ஒரு சம்பவம் எல்லாவற்றையும் மாற்றுகிறது…” என்று கதையின் காரண காரியங்களை சுமார் மூன்று மணி நேரம் சொல்லியிருப்பேன். “ஐ’ மாதிரியான ஒரு படம் முடித்து விட்டு அப்போதுதான் ஓய்வில் இருந்தார். மீண்டும் அவருக்கு நான் சொன்ன கதை அதே மாதிரியான ஒரு களம். ஆனால், கொஞ்சம் கூட அதைப் பற்றி அவருக்கு கவலை இல்லை. கதை சொன்ன இரண்டாவது நாளிலேயே படத்துக்குத் தயாராகி விட்டார். “”இந்த லுக் போதுமா?” “”இது எப்படி இருக்கு?”ன்னு உடம்பை ஏற்றி இறக்கி வாட்ஸ் ஆப் அனுப்பினார். எந்த வேகத்தில் பந்தை சுவற்றில் அடிக்கிறோமோ அதே வேகத்தில் பந்து கைக்கு வர வேண்டும். அப்போதுதான் அது டேமேஜ் இல்லாமல் இருக்கிறதென்று அர்த்தம். அப்படியொரு வேகம் விக்ரமிடம் நான் நாளுக்கு நாள் பார்த்தேன். உடம்பு ஒரு வேகத்திலும் மனசு வேறொரு வேகத்திலும் பயணம் செய்தால் வாழ்க்கை நரகமாகி விடும். ஆனால் இரண்டையும் சீராக வைத்து சினிமாவுக்காகப் பயணிக்கிறார் விக்ரம்.

விக்ரமுடன் ஒரு படம்… பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கும்…?

விக்ரம் என் படத்துக்குள் வந்ததும் மனசெங்கும் அப்படி ஒரு பரவசம். ரொம்பவே சந்தோஷம் என்றாலும், அந்த நம்பிக்கையை கடைசி வரைக்கும் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்பு என்னை ரொம்பவே பக்குவமாக மாற்றியிருக்கிறது. பல சமயம் விமர்சனங்களை விட பாராட்டுகள்தான் நம்முடைய பதற்றத்தையும், பயத்தையும் அதிகமாக்கி விடுகிறது. அப்படி ஒரு மனநிலைதான் இப்போது வரைக்கும். மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எது சொன்னாலும் திருப்தி ஆகி விடுவார்கள். ஆனால், விக்ரம் ரசிகர்கள் அப்படியில்லை. எதிலும் இன்னொரு படி மேலே வந்து அவர்களை அசரடிக்க வேண்டும். அதற்கு இன்னும் நூறு மடங்கு அதிகமான உழைப்பை தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். விக்ரம் மாதிரியான நடிகரோடு பணி புரிந்தால் அந்த உறுதி இன்னும் வலுவாகி விடும். அப்படித்தான் இதில் எல்லோரும் இணைந்து பணி புரிந்திருக்கிறோம்.

சமந்தாவுக்கு என்ன ஸ்பெஷல்…?

ஷங்கர் சாரின் “ஐ’ படத்தில் விக்ரமோடு சமந்தா ஜோடி சேர்ந்திருக்க வேண்டும். ஏதேதோ காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்காகவே அந்த ஜோடியை இதில் கொண்டு வந்து விட்டேன். சமாளிப்புக்காக இப்படிச் சொல்லவில்லை. “ஐ’ படத்துக்காக வந்த காம்பினேஷன் நியூஸ் இருவரையும் இணைக்க வேண்டும் என்கிற திட்டத்தை எனக்கு கொடுத்தது. நிஜத்தில் சமந்தா சமூக ஆர்வமுள்ள பெண். சம்பாதிக்கிற பணத்தில் பெரும் பகுதியை அநாதை குழந்தைகள் நலன், முதியோர்கள் பாதுகாப்பு என செலவழிக்கிறார். இதைத் தெரிந்து கொண்டு பேசினால் “”வேண்டாம் சார்… விளம்பரம் வேண்டாம். எந்த இடத்திலும் இதைப் பேசாதீங்க…” என்று சொல்லுவார். படப்பிடிப்புத் தளத்தில் இதை உணர்ந்த போது விக்ரம் ஆச்சரியப்பட்டார். இப்போது போய் விக்ரமிடம் உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்டால், நிச்சயம் சமந்தா என்று பதில் வரும். அந்தளவுக்கு எல்லோருக்கும் பிடிக்கிற பெண் சமந்தா.

சமந்தாவுக்கு இருக்கிற சினிமா ஆர்வம் ரொம்பவே ஆச்சரியமானது. எதிலும் தீர்க்கமான முடிவு அவரிடம் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் வலுவாகவும், உறுதியாகவும் இருக்கிற சமந்தாவுக்கு இந்தக் கதையில் அப்படி ஒரு ஸ்கோப் கொடுத்திருக்கிறேன். “பத்து எண்றதுக்குள்ள…’ எண்ணி முடிச்சிட்டோம். படம் வந்த பின் திரையில் பாருங்கள். உங்களுக்கே அது புரியும்.

 

LEAVE A REPLY