எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை – மஹிந்த

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தற்போதைய அரசாங்கம் நாட்டின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல திட்டங்களை முன்னெத்துள்ளது.

2024ஆம் ஆண்டு மின்சார சபை இலாபத்துடன் இயங்கக்கூடியதாக அபிவிருத்தி செய்யப்படும்.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன், கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் நடைபெற்றது.

இதன் போது அடுத்த வாரம் மீண்டும் கட்சி தலைவர் கூட்டத்தைக் கூட்டி ‘ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணி’ கூட்டணியமைத்தலில் காணப்படும் சிக்கல்கள் குறித்து கவனம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்கிழமை கட்சி தலைவர் கூட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் போது பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கூட்டணியின் சின்னம் என்பன தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதியளவில் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வும் வழங்கப்படும்.

ரஞ்சன் ராநாயக்கவின் குரல் பதிவுகளால் நாட்டின் நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் பாதுகாப்புத்துறை என்பன பாரிய நெருக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளன.

மக்கள் மத்தியில் நீதித்துறை மீது காணப்படும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. இவ்விடயம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.