எரிபொருட்கள் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பில்லை: அமைச்சர்

எரிபொருட்கள் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பில்லை என மீன்வளத்துறை அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாடுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ஜெயக்குமார் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்,

“வருமானமானத்தை ஈட்டிக்கொள்ள மத்திய அரசுக்கு அநேகமான வழிகள் உள்ளதால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முன்வர வேண்டும்.

இருப்பினும் எரிபொருள் விலையைக் குறைக்க தமிழக அரசுக்கு மனமிருந்தாலும், 14 ஆவது நிதிக்குழுவில் மத்திய அரசு வழங்க வேண்டிய 6,000 கோடி ரூபாயை வழங்கினால் மட்டுமே விலைக் குறைப்பு சாத்தியமாகும்” எனவும் அமைச்சர் கூறினார்.