எம்.ஜி.ஆர் சொத்துகள் தொடர்பான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் மறுப்பு!

எம்.ஜி.ஆர் சொத்துகளை நீதிபதி ஹரி பரந்தாமன் நிர்வகிப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான ராமாவரம் தோட்டம், எம்.ஜி.ஆர் – ஜானகி அம்மாள் கல்லூரி உள்ளிட்ட சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக எம்.ஜி.ஆர் உயில் எழுதி வைத்திருந்தார். அதில், என்.சி.ராகாவாச்சாரியையும் அவருக்குப் பிறகு, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களில் ஒருவரான லதாவின் கணவர் ராஜேந்திரனும் சொத்துகளை நிர்வகிக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்திருந்தார். இவர்கள் இருவருக்குப் பிறகு, உயர் நீதிமன்றம்தான் சொத்துகளை நிர்வகிப்பதற்கான ஆட்களை நியமிக்க வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

லதாவின் கணவர் ராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் சொத்துகளை நிர்வகிப்பதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு அந்த உரிமை வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் லதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளபடி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பாலிநாரிமன் மற்றும் எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வின் கீழ் இன்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்கு எஸ்.கே.கவுல் மறுத்துவிட்டார். அவர், நீதிபதிகள் நிர்வகிப்பதைவிட உறவினர்கள் நிர்வகித்தால் செலவீனங்கள் குறையும். ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்துள்ளதால் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY