எம்மை ஏமாளிகள் என நினைத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு

தமிழ் தேசிய ஒற்றுமைக்காக செயற்படும் எம்மை, அரசியல் ஏமாளிகள் என நினைத்தால், அதனால் ஏற்படும் முழுமையான விளைவுகளிற்கும் அவர்களே பொறுப்பு என, தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அக் கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் தமிழ் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகளோடு கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

தமிழ் தேசிய ஒற்றுமைக்காக பரந்துபட்ட ஆதரவுக்காக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.

ஆனால், எம்மை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதனால் ஏற்படும் விளைவுக்களுக்கு அவர்களே பொறுப்பு.

இன்று நாம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி தமிழீழ விடுதலை கழகம், தமிழர் விடுதலை கூட்டணி ஆகியோருடன் பேசியுள்ளோம். நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னனியோடு பேசவுள்ளோம்.

எமது நீண்டகால அரசியல் பயணத்தில் இது ஒரு சாதாரண விடயமாகும். ஆனால் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமிழ் தேசியத்தின் ஒற்றுமை என்பது விளையாட்டு பந்தாக மாற்றமடைந்து விட கூடாது என்பதை கூறிக் கொள்கின்றோம்.

இந்த நொடி வரை இதுவே எமது நிலைப்பாடு. ஆனால் எதிர்காலம் குறித்து ஆரூடம் கூற முடியாது என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY