எமர்ஜென்சியை அமல்படுத்திய வழக்கில் முஷ்ராப் நிபந்தனைகளை ஏற்க பாகிஸ்தான் நீதிமன்றம் மறுப்பு

எமர்ஜென்சியை அமல்படுத்திய வழக்கில் முஷ்ராப் நிபந்தனைகளை ஏற்க பாகிஸ்தான் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக இருந்த முஷ்ராப், அப்போது ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தார். மேலும் 2007ல் அவர் எமர்ஜென்சியை அமல்படுத்தினார். இதுபற்றிய வழக்கு விசாரணை தற்போது பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் அரசியல்சாசன சட்டப்படி மரண தண்டணை விதிக்கலாம். வழக்கில் ஆஜராகும்படி முஷ்ராப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், முஷ்ராப் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முஷ்ராப் நீதிமன்றத்தில் ஆஜராக சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவர் ஆஜராகும்போது ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும், மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்புவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மே 5ல் நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்யப்பட்டது. மனுவை 3 நீதிபதிகள் கொண்ட சிறப்பு நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது முஷ்ராப் மனுவை பார்த்ததும் நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். ‘‘முஷ்ராப் தேச துரோக வழக்கில் ஒரு தலைமறைவு குற்றவாளி. அவருக்கு எந்த சலுகையும் அளிக்க முடியாது. அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும். அதைவிட்டு நீதிமன்றத்திற்கு அவர் ஆணையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை விரைவில் இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது அரசின் பொறுப்பு’’ என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY