எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம் – நாடாளுமன்றில் சீறினார் மாவை

காங்கேசன்துறையில் அமைந்துள்ள ராஜபக்ஷ அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘புனிதத்தலங்கள் அமைந்திருக்கும் இந்த பிரதேசத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் நில அபகரிப்புக்கு இடமளிக்கமாட்டோம். அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்.

அவ்வாறு இல்லாமல் எமது புனித பிரதேசங்கள் அமைந்திருக்கும் நகுலேஸ்வர, கீரிமலை பிரதேசங்களை எந்த விலைகொடுத்தேனும் நாங்கள் பாதுகாப்போம்.

எந்த சந்தர்ப்பத்திலும் எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.