எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை – பிரதமர் மஹிந்த!

எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழ் ஊடகப் பிரதானிகள் உடனான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கீதம் குறித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழ் மக்களினால் கொண்டுவரப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை.

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனைத் தவிர வேறு எந்த நன்மைகளும் அவர்களுக்கு நல்லாட்சியில் கிடைக்கவில்லை.

இடத்தினை பொறுத்தே எந்த மொழில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். குறிப்பாக நான் தமிழ் பாடசாலையில் இடம்பெறும் நிகழ்வொன்றுக்கு சென்றால் அங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை.

அத்துடன், நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வில் எந்த மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது என்பது தீர்மானிக்கப்படவில்லை.

எமது ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு தடையில்லை. தமிழில் தேசியக் கீதம் இசைக்கக் கூடாது என ஒரு போதும் கூறவில்லை.

தேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசியக் கீதம் பாடுவது தொடர்பாக அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ளவில்லை.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.