‘எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதா முயற்சி’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு

எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதா முயற்சிக்கிறது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

தேர்தல் பிரசாரம்

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 9 மற்றும் 14-ந்தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் இப்போதே அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுவதற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அபாஜி நகரில் 2-வது நாளாக அவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவு அணியினரை சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மோடியே காரணம்

காங்கிரஸ் எப்போதுமே தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும். ஆனால் பா.ஜனதாவோ அல்லது பிரதமர் மோடியோ தங்களது தவறை எப்போதும் ஒப்புக் கொள்வதில்லை. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. தோல்வி அடைந்ததற்கு பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில் காரணம் ஆவார்.

மோடியும், அமித்ஷாவும் ஊடகங்களை பின்னால் இருந்து இயக்குகின்றனர். எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. ஆனாலும் அதில் பா.ஜனதாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

நாம் பிறரை விமர்சிப்பதில் கண்ணியத்தின் எல்லையை கடந்தது கிடையாது. ஆனால் இதில் பிரதமர் தனது பதவிக்குரிய மதிப்பில் இருந்து கீழே இறங்குகிறார்.

பதிலடி கொடுக்கும் சக்தி

எனது தோற்றத்தை பற்றிய உண்மை எனக்குத் தெரியும். அதேநேரம் எனது நற்பெயரை கெடுக்க பா.ஜனதாவினர் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை மக்களும் அறிவார்கள்.

என்னை பற்றி கண்ணியக் குறைவாக விமர்சித்து என் மீதுள்ள நற்பெயரை கெடுக்கும் முயற்சிக்கு பதிலடி தரும் சக்தியை சிவபெருமான் எனக்கு அளித்து இருக்கிறார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY