எனது தலைமையில் அரசாங்கம் உருவானால் இந்தியாவுடனான உறவு புதுப்பிக்கப்படும் – மஹிந்த

எனது தலைமையில் அரசாங்கம் ஒன்று மீண்டும் உருவாகினால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவை புதுபிக்க நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கடந்த 1980 ஆம் ஆண்டும் 2014 ஆம் ஆண்டும் பாரிய அளவில் பிளவு பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தி ஹிந்து பத்திரிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். இதன் போதே அவர் மேற்படி விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் நிலவிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா அளபரிய சேவையாற்றியதாக தெரிவித்த அவர், தற்போது இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் குறைந்தளவான தொடர்பாடல் காணப்படுவதாக தெரிவித்தார்.

எனவே 80 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உறவு முறிவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதாரம், சர்வதேச போக்குவரத்து போன்றவை இரு நாட்டு உறவுகளில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடற்பாதுகாப்பைப் போன்று ஏனைய பாதுகாப்பு விடயங்களுக்கும் முக்கியதுவம் அளித்து செயற்படவேண்டியதும் மிக முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிலையான அரசியல் தலைமைத்துவமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய பங்காற்றும் எனவும் மஹிந்த கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதுடன், அவர் நிச்சயம் வெற்றிபெறுவார் எனவும் அவர் கூறினார்.

இதன்போது, இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, மக்களை திருப்திப்படுத்த முடியும் மாறாக அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த முடியாது எனவும் அதுவே பிரச்சினைக்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.