எனக்கு மிகவும் பிடிக்கும்; ‘நீச்சலைப் போல் சிறந்த உடற்பயிற்சி எதுவும் இல்லை’ நடிகை திரிஷா பேட்டி

indexஎனக்கு நீந்துவதற்கு மிகவும் பிடிக்கும். உடம்பின் எடையை குறைக்க அது நல்ல பயிற்சி என்று நடிகை திரிஷா கூறினார்.

நடிகை திரிஷா, கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த ‘தூங்காவனம்’ படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது. ‘அரண்மனை’ பேய் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ‘நாயகி’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம்.

மலையாள படம் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ‘ஜெயம்’ ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் நிதி நெருக்கடியால் வெளி வராமல் முடங்கி இருக்கிறது.

நீச்சல் பயிற்சி

தற்போது உடற்பயிற்சிகளில் திரிஷா தீவிரமாக இறங்கி இருக்கிறார். ‘நாயகி’ அதிரடி கதையம்சம் உள்ள படம் என்றும் அதற்காகவே அவர் உடற்பயிற்சிகள் செய்கிறார் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தினமும் நீச்சல் பயிற்சியில் ஈடுபடுகிறார். நீச்சல் உடையில் இருப்பது போன்ற தனது படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீச்சல் பயிற்சி பற்றி திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘ஒவ்வொருவருக்கும் முதல் காதல் இனிமையானது. அது மனித காதல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். பொருட்கள் மீதான காதலாக இருக்கலாம். ஆடைகள் மற்றும் உணவு மீதான காதலாகவும் இருக்கலாம்.

முதல் காதல்

என்னுடைய முதல் காதல் நீச்சல். ஆரம்ப காலத்தில் தினமும் நீச்சல் பயிற்சிக்கு போவேன். அதன்பிறகு நடிப்பில் கவனம் திரும்பி விட்டதால் நீந்துவதற்கு போக முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போது மீண்டும் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறேன். நீச்சல் குளத்தில் 50 தடவை நீச்சல் அடித்தேன்.

நீச்சலைவிட சிறந்த உடற்பயிற்சி எதுவும் இல்லை. எடையை குறைத்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நீச்சல் உதவுகிறது.’’

இவ்வாறு திரிஷா கூறினார்.

LEAVE A REPLY