எனக்கு இவர்கள் தான் தேவை! கடும் அதிருப்தியில் ஜனாதிபதி கோட்டாபய

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அமைச்சப் பதவி கோருபவர்களால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடுமையான அதிருப்தியில் இருப்பதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன அறுதிப் பெரும்பான்மையை பெற்று வெற்றியீட்டியிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பிரதமராக மஹிந்த ராஜபக்ச பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

இந்த நிலயில், புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மாவட்ட மட்டத்தில் அதிக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக தெரியவருகிறது.

இந்த தரப்பினர் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தியும் நேரடியாகவும் ஜனாதிபதியிடம் இவ்வாறு கோரிக்கையை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் குறித்த நபர்கள் சம்பந்தமாக ஜனாதிபதி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் இப்படியான தரப்பினருக்கு அமைச்சு பதவிகளை வழங்கவிருக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகலாம் எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக கடும் அதிருப்தியடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ச, “சேவை செய்ய அமைச்சு பதவிகள் அவசியமா?” என வினவியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

பதவி, சிறப்புரிமைகளை எதிர்பார்த்து அரசியலுக்கு வரும் தரப்பினர், நாட்டை கட்டியெழுப்பும் தனது தீவிரமான தேவைக்கு தடையாக இருப்பதாகவும் பதவிகள் மற்றும் அமைச்சு பதவிகளை புறந்தள்ளி விட்டு, நாட்டுக்காக அர்ப்பணிப்பு செய்ய தயாராக இருப்போரே தனக்கு தேவை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.