எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயார் – கருஜயசூரிய

நாட்டின் நலனுக்காக எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் ஏனைய சங்க சபைகளின் மகாநாயக்க தேரர்களால், சபாநாயகர் கருஜயசூரியவிற்கு ‘விஷ்வகீர்த்தி ஸ்ரீலங்கா ஜனரஞ்சன’ விருது நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே சபாநாயகர் கருஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “1994 இல் நான் அரசியலுக்குப் பிரவேசித்தேன். அன்று முதல் இன்று வரை மோதல்கள் இன்றி, தூய அரசியலையே முன்னெடுத்துவருகின்றேன். இதுவே எனது கொள்கையாகும்.

அரசியல் பிரசாரத்துக்காக ‘கட்டவுட்’, ‘போஸ்டர்’, ‘பெனர்’, ‘பொலிதீன்’ போன்றவற்றை பயன்படுத்தாது, எதிர்கால அரசியல் பிரமுகர்களுக்கு சிறப்பான முன்னுதாரணத்தை வழங்கியுள்ளேன்.

கறைபடியாத கரத்துடன் அரசியலுக்குப் பிரவேசித்த நான், வெளியேறும் போதும் கௌரவமாக வெளியேறவே முற்படுகின்றேன்.

நாட்டுமக்களுக்கு நீதி, நேர்மை, சட்டம், ஒழுங்கு இவற்றை நிலை நிறுத்த எத்தகைய சவால்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். அதனூடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பேன்.

நான் பிறப்பு ரீதியாக சிங்கள பௌத்தனாக இருந்தாலும் நான் இனவாதியோ, மதவாதியோ அல்லன். எனது இனம், எனது மதம், எனது பிறப்புடன் கிடைத்த ஒன்றே தவிற நான் கேட்டுப் பெற்றதல்ல. புத்தபிராணின் போதனைகளின் படி ஏனைய மதங்களுக்கும் இனங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட சமூக புரட்சிக்கு அக்கால ஆணைக்குழு அறிக்கைகள் காரணமாக இருந்தன. அவை எனது வாழ்விலும் தாக்கத்தை செலுத்தின.

அதன் பிறகு இராணுவ அதிகாரியாகவும் தொடர்ந்து தனியார் துறையில் 32 வருடமும் சேவை புரிந்தேன்.

வெளிநாட்டுத் தூதுவராகவும், நகர பிதா, மாகாண சபை எதிரணித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், அத்துடன் தற்போதைய சபாநாயகர் ஆகிய பதவிகளை வகித்த நான், எனது கடமையையும் பொறுப்பையும் சரியாக நிறைவேற்றி வந்துள்ளேன்“ என குறிப்பிட்டுள்ளார்.