எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்க ஐ.தே.க. தயார்: அகிலவிராஜ்

எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.தே.க. பாரியளவில் வெற்றிபெறும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நிகவெரட்டிய பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எதிர்வரும் காலத்தில் பெரும்பாலும் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறும். எந்தத் தேர்தல் வந்தாலும் அவற்றினை எதிர்கொண்டு ஐ.தே.க. பாரிய வெற்றியைப் பெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெறும் என்பதில் நூற்றுக்கு ஐநூறு வீதம் நம்பிக்கை இருக்கின்றது. மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தெரியும்.

இனியும் மக்கள் தமது தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறிழைக்க மாட்டார்கள். ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் செல்வாக்குள்ள கட்சி.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று எதிர்வரும் 10 வருடங்களுக்கு பலம்மிக்கதொரு அரசாங்கத்தினை அமைக்க எம்மால் முடியும். அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள்” என அகிலவிராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.