எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கூட்டமைப்பிற்கு சபாநாயகர் விளக்கம்!

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காண முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கூடியது.

இதன்போது, எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து சபாநாயகர் இதுவரை விளக்கமளிக்கவில்லை என சம்பந்தன் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ”ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ எதிர்கட்சியாக திகழ முடியாது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி காணப்படுகின்ற நிலையில், அக்கட்சியின் உறுப்பினர் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட முடியாது.

எதிர்க்கட்சியாக கணிக்கப்படும் ஒரு கட்சி இரண்டாவது பெரும்பான்மை கட்சியாக திகழ வேண்டியதுடன், அதிலுள்ள எவரும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க கூடாது.

இவ்வாறானதொரு நிலையில் அரசியலமைப்பை வைத்துக் கொண்டு சிறுபான்மை மக்களும், சிறுபான்மை அரசியல் கட்சிகளும் பிழையாக வழிநடத்தப்படக் கூடாது. சிறுபான்மையினரின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து இது தொடர்பான தெளிவுபடுத்தலை வழங்கிய சபாநாயகர், ”ஐ.ம.சு. கூட்டமைப்பின் செயலாளரின் வேண்டுகோளுக்கு அமைய இன்றி பெரும்பான்மை அடிப்படையிலேயே மஹிந்த எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஐ.ம.சு.கூ. தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்ததற்கமைய பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட எதிர்க்கட்சியாக கருதப்பட்டது.

ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நியமனம் இடம்பெற்றது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக் காலங்களிலும் ஜனாதிபதியும், எதிர்க்கட்சி தலைவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

இவ்வாறனதொரு நிலையில், எதிர்க்கட்சி பதவி வகிக்க முடியாது என மஹிந்தவிற்கு கூறினால் அது அவரது உரிமையை உதாசீனப்படுத்துவதாக அமையும். அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் அதிகாரத்தை நாம் மீற முடியாது. எனவே, புதிய அரசியலமைப்பின் மூலமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்” எனத் தெரிவித்தார்.