எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த வருண லியனகே

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண பிரியந்த லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா காலமானதை தொடர்ந்து வெற்றிடமாகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட வருண லியனகே இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

4 ஆவது பாராளுமன்றத்தின் 8 ஆவது கூட்டத் தொடர் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் இன்று மதியம் வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மதியம் 1.00 மணிக்கு சபை அமர்வு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது வருண லியனகே இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ரஞ்சித் சொய்சா காலமானதன் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.

2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெற்றவர்கள் வரிசையில் அடுத்த இடத்தில் வருண பிரியந்த லியனகே காணப்பட்டார்.

ரஞ்சித் சொய்சா காலமானதன் பின்னர் இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.