எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பொது நிர்வாக அமைச்சர் இந்த விவகாரத்தில் விளக்கம் கோரியதால் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கும் இதேபோன்ற வசதிகள் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இதுகுறித்து விளக்கம் கோரியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் இரா. சம்பந்தனுக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பந்தனுக்கு வீட்டை ஒதுக்கியதன் விளைவாக, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு வீட்டை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பொது நிர்வாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை இரா.சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக இல்லாவிட்டாலும் கடந்த 2017 முதல் உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார், இதனை தொடர்ந்து அந்த இல்லத்தை மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.