எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பேரவையில் பதில் அளிக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு தடை

Daily_News_859600305558எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பதில் அளித்து பேசக் கூடாது. அமைச்சர்கள் மட்டுமே பதில் அளித்து பேச வேண்டும் என்று கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 5.05 மணிக்கு நடந்தது. கட்சி அலுவலகத்துக்கு வந்த சசிகலாவை, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். அதன்பின் முதல் மாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. ஜெயலலிதா இருந்தபோது மேடையில் வழக்கமாக அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் இரு புறமும் அமர்ந்திருப்பார்கள்.

ஆனால் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் மதுசூதனன் மட்டுமே அமர்ந்திருந்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் எம்எல்ஏக்களுடன் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். அப்போது சசிகலா பேசும்போது, ‘‘எதிர்க்கட்சிகள் பேசும்போது எம்எல்ஏக்கள் யாரும் பேசக் கூடாது. தேவையில்லாமல் பிரச்னை ஏற்படுத்தக் கூடாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். எம்எல்ஏக்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்னைகளை உருவாக்கக் கூடாது. அதேநேரத்தில், அமைச்சர்கள் ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் பேச வேண்டும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் எம்எல்ஏக்கள் தொகுதிகளுக்கு செல்ல வேண்டும். அங்கு மக்களின் குறைகளை கேட்டு அதை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்களைச் சந்தித்து தொகுதி பிரச்னைகளை தீர்த்துக் கொள்ளுங்கள். அமைச்சர்கள் உங்கள் தொகுதிகளின் குறைகளை தீர்வு செய்யாவிட்டால், என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.அதைத் தொடர்ந்து எம்பிக்கள் கூட்டம் நடந்துள்ளது. அப்போது எம்பிக்கள் தம்பித்துரை சொல்வதைக் கேட்க வேண்டும். யார் பேச வேண்டும், யார் பேசக் கூடாது என்பதை அவர் சொல்லுவார். நாடாளுமன்றத்தில் பிரச்னைகளுக்கு ஏற்ப நாம் முடிவு எடுக்கலாம். என்ன முடிவு என்பதை கட்சித் தலைமை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY