எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதனால் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது, “நடைபெறவுள்ள தேர்தல் எங்கள் தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தீர்மானங்களை புதிய நாடாளுமன்றம் எடுக்கும். அத்துடன் அனைத்து மக்களும் தேர்தலில் பங்கெடுக்கவேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும்.

எனவே ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு காலையிலேயே சென்று தங்களது கடமைகளை நிறைவேற்றுங்கள்.

அத்துடன் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக சுகாதார அதிகாரிகள் விடுத்த வேண்டுகோள்களையும் அனைவரும் பின்பற்றுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.