எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தம்!

சேலம் – சென்னை எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எட்டுவழிசாலைக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் ஒரு கட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மத்திய அரசு சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி, எட்டுவழிசாலைக்கான நிலம் கையகப்படுத்தல் இருவாரங்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எட்டுவழிச்சாலை வடிவமைப்பபை மாற்றியமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே எட்டுவழிச்சாலையை குறைத்து ஆறுவழிச்சாலையாக மாற்ற திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதால், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.