எடியூரப்பா பதவியேற்புக்கு எதிராக காங்கிரஸ் மனு’ – நள்ளிரவே விசாரிக்கத் தலைமை நீதிபதி ஒப்புதல்!

கடந்த 12-ம் தேதி நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ம.ஜ.த-வின் குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதேபோல் பாஜக சார்பில் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கிடையே ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சியமைக்கத் கோரி ஆளுநர் விடுத்ததுடன் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். ஆளுநரின் அழைப்பை அடுத்து நாளைக் காலை 9.30 மணிக்கு எடியூரப்பா மட்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, “ஆளுநர் எடியூரப்பாவை அழைத்ததன் மூலம் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆளுநர் குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறார். தேவையான பெரும்பான்மை இல்லாத நிலையில் 15 நாட்கள் அவகாசம் எதற்கு?. ஆளுநரின் முடிவை எதிர்த்து வழக்கு தொடருவோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.

இதற்கிடையே, ஆளுநர் எடியூரப்பாவை ஆட்சியமைக்கச் சொன்னதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மனுவை இரவிலேயே விசாரிக்க வேண்டும் எனத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்றத் தலைமை நீதிபதி காங்கிரஸ் மனுவை இரவு விசாரணை செய்ய ஒப்புக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நள்ளிரவில் விசாரணை நடத்துகிறது

LEAVE A REPLY